![pp](http://image.nakkheeran.in/cdn/farfuture/yo7GXFHevwqTogqq-J7Akj_4MSCdV338SvigqzRvtz0/1546612512/sites/default/files/inline-images/pushpavanam.jpg)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நிவாரண உதவிகளை வழங்கியிருப்பது பலரையும் நெகிழவைத்துள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகள் கஜா புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, இன்னும் அந்த துயரத்தில் இருந்து மீளாமல் இருக்கின்றனர். புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்களில் புஷ்பவனம் கிராமமும் ஒன்று.
இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி, புயல் அடித்து பாழ்படுத்திய சமயத்தில் தனது பாடல் மூலம் புயலின் கோரத்தை உலகிற்கே சொன்னார். அதனை தொடர்ந்து தனது கிராமத்தில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு நிவாரண உதவியும் அளிக்க முன்வந்தார்.
அதன்படியே புஷ்பவனம் கிராமத்தில் இருக்கும் 25 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் நிவாரண உதவிகளை வழங்கினார். இதேபோல், அருகில் உள்ள நாலுவேதபதி கிராமத்தில் கர்ப்பிணிகள் மற்றும் அண்மையில் குழந்தை பெற்ற 51 பெண்களுக்கும் தலா ரூ.3 ஆயிரம் வீதமும், பெரியகுத்தகை கிராமத்தில் 16 பெண்களுக்கு தலா ரூ.3 ஆயிரமமும் வழங்கினார்.
புஷ்பவனம் நண்பர்கள் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சிக்கு பணி ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பசுபதி தலைமை வகித்தார். சென்னை ஆவணக்காப்பகத்தின் பதிப்பாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற கோவிந்தராசன், உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.