திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், கங்காவரம் மதுரா, நவாப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவருக்கு திருப்பதி, பாஸ்கர் என இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணமாகி தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர், லாரி ஓட்டுநராக உள்ளார் திருப்பதி.
ஓட்டுநர் திருப்பதி குடும்ப பிரச்சனைக்காக தனது சகோதரர் பாஸ்கரனிடம், தான் குடியிருக்கும் வீட்டு பத்திரத்தை தந்து 2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த 2 லட்ச ரூபாய் கடனுக்கு வட்டியாக மட்டும் 2 லட்ச ரூபாய் தந்துள்ளார். அதோடு, அசல் தொகையையும் திருப்பி தந்துள்ளார். பாஸ்கரோ, இந்த வட்டி பத்தாது, இன்னும் கூடுதல் வட்டி வேண்டும் என தகராறு செய்துள்ளார். இந்த பிரச்சனை இருவருக்கும் இடையே இருந்து வந்தது.
வேலை நிமித்தமாக, திருப்பதி வெளியூர் சென்றிருந்த வேலையில், பாஸ்கரன், திருப்பதி வீட்டுக்கு வந்து அவரது குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, என் வட்டி பணத்தை தந்துவிட்டு பிறகு இந்த வீட்டுக்குள் வாங்க என மிரட்டி வெளியே துரத்திவிட்டு, கதவை பூட்டு போட்டு பூட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த திருப்பதியின் மனைவி சுமதி மற்றும் பிள்ளைகள் மீனாட்சி, துர்கா, விமல்ராஜ் ஆகியோருடன் தெருவில் இருந்துள்ளனர். விவகாரத்தை திருப்பதிக்கு அவர் மனைவி போன் செய்து கூறியுள்ளார். இதுப்பற்றி கலசப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கூறியும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் மே 13ந்தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு குடும்பத்தோடு வந்த திருப்பதி, தங்கள் மேல் மண்ணெண்ணய் ஊற்றிக்கொண்டு தீ குளிக்க முயன்றுள்ளார்கள். அப்போது அங்கிருந்த மாவட்ட ஆட்சியரக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்கள்.
தகவல் கேள்விப்பட்டு, திருப்பதி குடும்பத்தினரின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பாஸ்கரன் குடும்பத்தினர் உடனடியாக அரசு வாகனத்தில் நவாப்பாளையம் கிராமத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்கள். கலசப்பாக்கம் வட்டாட்சியர் திருப்பதியின் சகோதரரான பாஸ்கரனிடமிருந்து, பூட்டப்பட்ட வீட்டிற்கான சாவி பெறப்பட்டு திருப்பதி குடும்பத்தினரை பத்திரமாக அவர்களது சொந்த வீட்டில் தங்கவைத்தார்.
திருப்பதி தனது சகோதரர் பாஸ்கரன் மீது அளித்துள்ள புகார் குறித்து, இருதரப்பையும் அழைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதால், போலிஸாரும் விசாரிக்க துவங்கியுள்ளனர். வட்டி தொகைக்காக உடன் பிறந்தவனே, தனது சகோதரன் குடும்பத்தை வீட்டை விட்டு விரட்டி, கதவை பூட்டியது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணம் வந்தால் பசியும் பறந்துப்போகும் என்பார்கள். பந்த பாசமும் பறந்து போகும் என்பதை அவர் சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.