Skip to main content

’ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு செய்த இமாலயத் தவறு’- தி.வேல்முருகன் குற்றச்சாட்டு

Published on 16/12/2018 | Edited on 16/12/2018
s

 

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை:

’’13 பேரை படுகொலை செய்து அவர்களின் பிணங்களின் மேல் நின்றுகொண்டும் சூழ்ச்சி, சதி, சட்டம் வளைப்பு, உரிமைகள் மறுப்பு  ஆகியவற்றை அரங்கேற்றியும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது!  இதற்கு தமிழக அரசு துணைபோகவில்லையென்றால், இப்போதாவது உடனடியாக தமிழக அமைச்சரவையைக் கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாகக் கொள்கை முடிவெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!


 

பல மாநிலங்களும் அனுமதிக்காத ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை ஜெயலலிதா அரசு அனுமதித்து தூத்துக்குடியில் அது 1996ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது.

 

இந்த ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபட்டு, புற்றுநோய் உள்பட உயிருக்கும் உடலுக்கும் கேடான நோய்கள் மக்களைத் தாக்கின. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். அந்தப் போராட்டங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட்து.

 

கடந்த மே 22ந் தேதி மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. அதில் 13 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர்; நூற்றுக்கணக்கானோரை படுகாயப்படுத்தினர். மக்களின் கொந்தளிப்பையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்து மே 28ந் தேதி அதற்கு சீல் வைத்தது தமிழக அரசு.

ஆனால் இதனை எதிர்த்து, ஆலையை மீண்டும் திறக்கக் கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது அனில் அகர்வாலின் வேதாந்தா கார்ப்பொரேட் நிறுவனம்.

 

அந்த வழக்கில், ஆலையையும் அதன் சுற்றுப்புறத்தையும் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட ஒரு குழு அமைக்க உத்தரவிடப்பட்டு, அந்தக் குழு, ஆலையை மீண்டும் திறக்கலாம் என அறிக்கை அளித்தது.

ஆக, ஸ்டெர்லைட்டின் அதிபர் அனில் அகர்வால், ஆய்வுக் குழுவின் தலைவர் தருண் அகர்வால் என இரு அகர்வால்களும் ஒரே புள்ளியில் இணைந்தனர் என்றால் இதனை வியப்பாகவோ விசித்திரமாகவோ பார்ப்பதற்கில்லை.

 

தமிழக அரசு இதில் அமைச்சரவையைக் கூட்டி ஆலையை மூடுவதாக கொள்கை முடிவினை எடுத்திருக்க வேண்டும். அதையே எதிர்க்கட்சிகள், சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் வலியுறுத்தினர். ஆனால் எவர் பேச்சையும் கேட்காமல், ஆலையை மூடுவதாக வெறும் அரசாணையையே பிறப்பித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் ஆலையால் ஏற்பட்ட, ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த தருண் அகர்வால் குழு, 25 நிபந்தனைகளைக் குறிப்பிட்டு அதனடிப்படையில் ஆலையை மீண்டும் இயக்கலாம் என்று அறிக்கை அளித்துவிட்டது.

 

ஏற்கனவே ஏற்பட்ட சூழலியல் பாதிப்புகள் குறித்தோ, அவை மேலும் ஏற்படாதவண்ணம் தடுப்பு அமைப்புகள் எதையும் ஆலை உருவாக்கவில்லை என்பது குறித்தோ தருண் அகர்வால் தன் அறிக்கையில் வெளிப்படுத்தாமல் தவிர்த்துவிட்டார் என்பது முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாகும்.

 

ஆனால் அந்த அறிக்கை சொன்னது: “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த முடியாது. ஆலைக்கு சீல் வைக்குமுன், ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ் எதையும் அளிக்கவில்லை; நிர்வாகத்தின் தரப்பு நியாயத்தை முன்வைக்க உரிய அவகாசமும் வழங்கவில்லை. எனவே ஆலையை மூட அரசு பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது. ஆலையை மூட குறிப்பிட்டுள்ள காரணங்களும் உகந்ததாக நியாயமானதாக இல்லை. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் உற்பத்தியை தொடங்க அனுமதிக்க வேண்டும்; காற்று, நிலத்தடி நீர், சுற்றுச்சூழல், திடக்கழிவு மேம்பாடு குறித்து குழு வழங்கும் 25 பரிந்துரைகளை நிபந்தனையாக முன்வைத்து அனுமதி வழங்கலாம்.”

 

இந்த அறிக்கை தொடர்பாக தமிழக அரசு – ஸ்டெர்லைட் நிர்வாகம் இரு தரப்பினரும் ஒரு வாரத்தில் தங்கள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 7ந் தேதிக்கு ஒத்திவைத்தார் தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல்.

அதன்பிறகு தமிழக அரசு தாக்கல் செய்த பதில் என்னவென்ற விவரம் வெளியாகவில்லை. இந்நிலையில் தருண் அகர்வால் குழு செய்த பரிந்துரையை ஆய்வு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என இன்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்கவும் ஆலை வெளியேற்றும் கழிவுகளை கண்காணிக்க குழு அமைக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த வழக்கில் தங்களை ஒரு சாராராக ஏற்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ, ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவின் தலைவர் பேராசிரியர் பாத்திமா, வணிகர் சங்க நிர்வாகி ராஜா, மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி அர்ஜுனன் ஆகியோர் மனு அளித்தனர். இவர்கள், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் அரசாணையை விசாரிக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு; தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது” என்பதைச் சுட்டிக்காட்டினர். ஆனால் இதை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்க மறுத்தது; இதனை உச்ச நீதிமன்றம் ஏற்றாலும், முதன்மைப் பிரச்சனையாக விசாரிக்க உத்தரவிடவில்லை.

தமிழக அரசு, இந்த தருண் அகர்வால் நியமனத்தை ஆட்சேபித்திருக்க வேண்டும்; ஆனால் செய்யவில்லை. ஏன் அவரை ஆட்சேபித்திருக்க வேண்டும் என்றால், தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் எவரையும் தீர்ப்பாயம் ஏற்கவில்லை; அதோடு தருண் அகர்வால் ஏற்கனவே ஊழல் கறை படிந்தவர்.

மேலும், மதுரை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு, “ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த 28.05.2018 தேதிய அரசாணை வலுவற்றதாக உள்ளது” என்று அப்போதே சுட்டிக்காட்டியது. அதற்குப் பிறகும்கூட, அமைச்சரவையைக் கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை அமைச்சரவையின் கொள்கை முடிவாக எடுக்காததுதான் இதில் தமிழக அரசு செய்த இமாலயத் தவறு.

இப்போதும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உண்மையிலேயே அவருக்கு அந்த எண்ணம் இருக்குமானால், உடனடியாக தமிழக அமைச்சரவையைக் கூட்டி அதில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக கொள்கை முடிவினைத்தான் எடுத்திட வேண்டும் என்றே கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! ’’

சார்ந்த செய்திகள்