Skip to main content

பழனியை ஸ்தம்பிக்கவைத்த முத்தமிழ் முருகன் மாநாடு; தொடங்கி வைத்த மூன்று அமைச்சர்கள்!

Published on 24/08/2024 | Edited on 24/08/2024

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை  வீடான பழனியில் இருக்கும் பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று (24-08-24) தொடங்கியது. இந்த மாநாடு, இரண்டு நாள் மிகவும் விமர்ச்சியாக நடக்க இருக்கிறது. முதல் நாளான, இன்று (24ம் தேதி) காலை 8 மணிக்கு 100 அடி உயரக் கம்பத்தில் மாநாட்டு கொடியை தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் ஏற்றினார். அதைத்தொடர்ந்து, இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஊரவ வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், பழனி பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் உள்பட ஆதீனங்களும் முக்கிய பிரமுகர்களும் கண்காட்சிகளைப் பார்வையிட்டனர்.

இந்த கல்லூரி வளாகத்தில் அறுபடை வீடுகளை குறித்தும் வகையிலான 6 நுழைவுவாயில்கள், பிரதான நுழைவுவாயில் பகுதியில் கைலாய மலையில் சிவபெருமான், பார்வதி, கங்காதேவி அமர்ந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. முருகனின் வரலாற்றை காண 3 டி தொழில்நுட்பத்துடன் கூடிய திரையரங்கம், முருகனை அருகில் இருந்து காணும் வகையிலான வி.ஆர் தொழில்நுட்பத்துடன் கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்கில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சிவன். பார்வதி, மீனாட்சி இப்படி பல சாமி சிலைகளும் வைக்கப்பட்டிருந்தன. இந்த சாமி சிலைகளுக்கு முன் முருக பக்தர்களும், பொதுமக்களும் நின்று செல்பி எடுப்பதும், போட்டோ எடுப்பதுமாக கண்காட்சியை பார்வையிட்டனர். அதுபோல் ஒவ்வொரு முருகன் படத்திற்கு அருகில் அதனுடைய புறங்களை புராணங்களை எழுதியும் வைக்கப்பட்டு இருந்தன. கண்காட்சியை தொடங்கி வைத்த  மூன்று அமைச்சர்களும் வீ .ஆர். தொழில்நுட்ப கண்ணாடியையும், 3டி கண்ணாடிகளையும் போட்டு முருகனின் ஆறுபடை வீடுகளை தத்ரூபமாக பார்ப்பது போல் பார்த்தனர். 

அதைத் தொடர்ந்து, விழா மேடையில் காலை 9.35க்கு ஏறிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷத்துடன் விழாவை தொடங்கினார். அதோடு அமைச்சர்களான ஐ.பெரியசாமி, சக்கரபாணி உள்பட ஆதீனங்கள் நீதி அரசர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் உள்பட முக்கிய பிரமுகர்கள் மேடையில் அமர்ந்தனர். அதைத் தொடர்ந்து, 9.40க்கு சீர்காழி சிதம்பரம் இறை வணக்கம் பாடல் தொடங்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து 9.45க்கு முதல்வர் ஸ்டாலின், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு வாழ்த்துரை  வழங்கினார். இந்த வாழ்த்துரையில், துறை அமைச்சர் சேகர்பாபுவை பாராட்டி பேசியதுடன் மட்டுமல்லாமல் இத்துறை மூலம் அமைச்சர் செய்த திட்டங்களை சொல்ல வேண்டும் என்றால் மற்றொரு மாநாடு நடத்த வேண்டும் என்றும் கூறினார். 

அதை தொடர்ந்து, முருகனை ஆய்வு கட்டுரை மலரை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்க அதை நீதியரசர் பாலசுப்பிரமணி பெற்றுக்கொண்டார். இதையடுத்து, அமைச்சர்கள், ஆதீனங்கள் நீதியரசர்களுக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நினைவுப் பரிசுகளை வழங்கினார். மேலும்,  ஆதின பெருமக்கள் நீதி அரசர்களான சுப்பிரமணியன், புகழேந்தி, சிவஞானம், வேல்முருகன் ஆகிய நீதியரசர்கள் மாநாட்டில் முருகனைப் பற்றி பேசியும், அதோடு அரசுக்கு சில கோரிக்கைகளையும் முன்வைத்தனர். அதைக்கேட்ட அமைச்சர் சேகர்பாபு, ‘உடனே நீதியரசர்களின் கோரிக்கையை முடிந்த அளவுக்கு முதல்வரிடம் சொல்லி நிறைவேற்றி தருகிறேன்’ என்று மேடையிலையே உறுதி கூறினார். அதோடு  முதல் நிகழ்ச்சியும் முடிவடைந்தது.

இதில் ஆன்மிக சொற்பொழிவாளர்கள், வெளிநாட்டினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அதோடு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் வெளிநாட்டினர்களுக்கு என்ன சாப்பிடுவார்களோ அந்த சாப்பாடுகளை தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். அதோடு முக்கிய விஐபிக்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் கல்லூரியில் பணிபுரியும் அலுவலர்கள் பேராசிரியர்கள் உள்பட அறநிலையத்துறை அலுவலர்கள் அதிகாரிகள் அனைவருமே ஒன்றிணைந்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த மாநாட்டுக்காக பாதுகாப்பு பணியில் மூன்றாயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டை பார்க்க முருக பக்தர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டதால்,. பழனி நகரமே ஸ்தம்பித்துபபோய் இருக்கிறது. அதோடு இந்த மாநாட்டுக்கு வந்த அனைவருக்கும் பஞ்சாமிர்தத்துடன் கூடிய பிரசாதமும் இலவசமாக வழங்கப்பட்டது. மாநாட்டுக்கான, அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது                                               
 

சார்ந்த செய்திகள்