"ஹே ஜாகீர்.. எல்லாருக்கும் பிரியாணி கொடு.. யாரையும் வெயிட் பண்ண வெக்காத.. முருகன் வந்தாலும் கொடு.. டேவிட் வந்தாலும் கொடு" என சேவை மனப்பான்மையுடன் செயல்படும் அன்வாரிய்யா குடும்பத்தினரால் சிவகங்கை முழுவதும் மணக்கிறது.
சிவகங்கை மாவட்டம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் அன்வாரிய்யா. இவரது குடும்பத்தினர் கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நாள்தோறும் பிரியாணி தயாரித்து மருத்துவமனை வாசலிலேயே ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு உணவளித்தார்கள். இதனால் அன்வாரிய்யா குடும்பத்தினர் அப்பகுதியில் மிகவும் பிரபலம்.
இந்நிலையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து இஸ்லாமியர்களின் முக்கிய நிகழ்வான ரம்ஜான் நோன்பை கடைபிடித்து வருகின்றனர். இவர்கள் நோன்பை தொடங்குவதற்கு முன்பாக ஸஹர் என்ற உணவை அதிகாலையில் உண்பது வழக்கம். இதையடுத்து நோன்பு மேற்கொள்ளும் ஏழை முஸ்லிம்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு அன்வாரிய்யா குடும்பத்தினர் இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர். மேலும், அன்வாரிய்யா குடும்பத்தினரே அனைத்து வேலைகளையும் செய்கின்றனர். பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளை அவர்களே தயாரித்து வழங்குகின்றனர்.
அதே சமயம், உணவு தேவைப்படும் முஸ்லிம்கள் அவர்களது வாட்ஸ்ஆப் அல்லது மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால் உணவு வழங்கப்படுகிறது. தற்போது தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். ஆனால், இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இருப்பினும், அன்வாரிய்யா குடும்பத்தினர் எந்தவித கஷ்டத்தையும் பார்க்காமல் தங்களது சேவையை தொடர்ந்து செய்து வருகின்றனர். சேவை மனப்பான்மையுடன் அனைவருக்கும் உணவளிக்கும் அன்வாரிய்யா குடும்பத்தினர் அந்த வட்டாரத்தையே மணக்கச் செய்கின்றனர்.