எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கக் கோரி கடந்த ஆண்டு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் வழங்கினர். இதையடுத்து, ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்து கொண்டதால் அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கில் கடந்த மாதம் 14ம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார். ஆனால் நீதிபதி எம்.சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தெரிவித்தார்.
இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புகளால் சர்ச்சை ஏற்பட்டதால் உச்சநீதிமன்றம் 3-வது நீதிபதியாக நீதிபதி சத்திய நாராயணனை நியமித்தது. இந்த வழக்கு விசாரணையை தொடங்கி இருக்கும். அவர் இந்த மாதம் 23-ந்தேதியில் இருந்து 5 நாட்கள் தினமும் வழக்கு விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் மனைவி, மகளுடன் நீதிபதி சுந்தர் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது வீட்டுக்கு மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது. பெயர் ஏதுமின்றி மொட்டை கடிதமாக உள்ள அதில் நீதிபதி சுந்தருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள நீதிபதி சுந்தரின் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருடன் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளது.