Skip to main content

கொலை வழக்கு: பெண் என்ஜினீயர் உட்பட ஐந்து பேருக்கு வாழ்நாள் தண்டனை!

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
கொலை வழக்கு: பெண் என்ஜினீயர் உட்பட
ஐந்து பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை!

சேலம் நகரிலுள்ள கந்தம்பட்டி கிழக்கு, ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பொன்னான். இவருடைய மகன் கார்த்திக்(வயது-22). இவர் சேலம் லீ பஜாரில் மூட்டை தூக்கும் தொழில் செய்து வந்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ந் தேதி லீ பஜாரில் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு இரவு பத்து மணிளவில் கார்த்திக் ஆதிதிராவிடர் தெருவில் சென்று கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த குட்டமணி என்கிற அன்பரசு (வயது-22) என்பவர் தன்னுடைய வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது கார்த்திக் அவரை பார்த்து கிண்டலாக ஏதோ பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அங்கிருந்த அன்பரசின் அண்ணன் அறிவழகன் (வயது-28), அவருடைய மாமா குமார்(வயது-43), இவருடைய மனைவி மணிமேகலை (வயது-40), இவர்களுடைய மகள் கிரிஜா என்கிற கிருஷ்ணகுமாரி (வயது-23), மற்றும் குமாருடைய தாய் துக்கையம்மாள் (வயது-61) ஆகியோர் அன்பரசுக்கு ஆதரவாக வந்தனர்.

இதையடுத்து கார்த்திக் அவர்களுடனும் சண்டைக்கு போயுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அன்பரசின் உறவினர்கள் அனைவரும் ஓன்று சேர்ந்து, கார்த்திக்கை, அவர்களின் கையாலும், கட்டைகளாலும், மூட்டையை தூக்கும் கொக்கியாலும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கார்த்திக் கொலைக்கு காரணமான அன்பரசு, அறிவழகன், குமார், மணிமேகலை, கிருஷ்ணகுமாரி, துக்கையம்மாள் ஆகியோரை கைது செய்து, அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்த கொலை வழக்கு விசாரணை சேலம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது குமார் இறந்து விட்டார். மற்றவார்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

கார்த்திக்கை கொலை செய்த குற்றத்திற்காக அன்பரசு, அறிவழகன், மணிமேகலை, கிருஷ்ணகுமாரி, துக்கையம்மாள் ஆகிய ஐந்து பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் தீர்ப்பளித்தார். இதையடுத்து இவர்கள ஐந்துபேரும் கோவை நடுவன் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

- பெ.சிவசுப்பிரமணியன்

சார்ந்த செய்திகள்