Skip to main content

மணல் கடத்தலை தடுக்கும் அதிகாரிகளை மிரட்டும் தலைமை செயலக அதிகாரி யார் ?

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

 

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பாலாற்றில் நகராட்சி மற்றும் பேரூராட்சி, ஊராட்சிகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் அருகில் இரவு பகலாக ஜேசிபி மூலம் சுமார் 20 அடி முதல் 30 அடி ஆழத்திற்கு லாரி, மினி வேன், மாட்டு வண்டி, இருசக்கர வாகனம் ஆகியவை மூலமாக மணல் கடத்தப்பட்டு அருகிலுள்ள பகுதிகளில் கொட்டி அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு திருட்டு தனமாக மணல் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவைகள் அத்தனையும் செய்வது ஆளும்கட்சி புள்ளிகள் தான். 

 

s

 

இப்படி குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறுகளுக்கு அருகில் மணல் அள்ளுவதால் பாலாறு படுகை இராமாயண தோப்பு பகுதியில் இருந்து திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி நகராட்சிகள் மற்றும் உதயேந்திரம் பேரூராட்சி பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் போர்கள் பாதிக்கப்படுகின்றன. அதோடு, அளவுக்கு அதிகமாக ஆழத்தில் மணல் எடுப்பதால் குடிநீர் குழாய் உடைந்து  விடுகிறது. இதனால் தண்ணீர் முறையாக அந்த பகுதிகளுக்கு செல்வதில்லை. இதனால் குடிதண்ணிர் இல்லாமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

 

s

 

அதோடு, பாலாற்றின் ஓரம் பாலாற்று படுக்கை நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, அங்கே விவசாயம் செய்து வந்த விவசாயிகள், அந்த நிலங்களை மணலுக்காக மணல் திருடர்களுக்கு சென்ட் கணக்கில் குத்தகைக்கு விடுகின்றனர். அங்கிருந்து மணல் தோண்டியெடுத்து கடத்தி செல்கின்றனர் மணல் மாபியாக்கள். 

 

இதனால் பொதுமக்கள் மணல் திருட்டை தடுத்து எங்களுக்கு குடிநீர் சரியாக வழங்கவில்லையென்றால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர். மக்களின் இந்த தொடர் கோரிக்கையால் மணல் கொள்ளையை தடுக்க கோரி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வருவாய்த்துறையினருக்கு புகார் மனு அனுப்பினர். 

 

s

 

இதன் அடிப்படையில் வாணியம்பாடி வட்டாச்சியர் முருகன் தலைமையில் மூன்று பறக்கும்படையினர் கடந்த மூன்று நாட்களாக மணல் திருட்டில் ஈடுபடும் ஜேசிபி மற்றும் டிராக்டர் மாட்டு வண்டிகள் மினி லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

அப்படி பறிமுதல் செய்ததும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு போன் செய்த ஒருவர், நான் சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றுகிறேன், யாரைக்கேட்டு மணல் வண்டிகளை பிடிக்கிறீர்கள் என மிரட்டியுள்ளார். இதேப்போல் பலமுறை அவர் மிரட்டியதால் பிடித்த வண்டிகளை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யாமல் விட்டுள்ளனர். இப்போதும் அப்படியொரு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மிரட்டும் அதிகாரி யார் என்பதையும் இந்த அதிகாரிகள் வெளியே சொல்லவில்லை. பொதுமக்களுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் முழிக்கின்றனர். 

 

இந்த மிரட்டல் விவகாரம் தெரிந்தவர்கள், வாணியம்பாடி வருவாய்த்துறை அதிகாரிகள் என்ன செய்யப்போகிறார்கள் என பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். 

சார்ந்த செய்திகள்