புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் தெரு நாய்களால் அடிக்கடி விபத்துகள், நாய்கள் கடித்தல், ஆடு, மாடு கால்நடைகளை கடித்து குதறிவிடுகிறது. அதனால் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பலரும் மனுக்கள் கொடுத்திருந்தனர்.
இந்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவையடுத்து நகராட்சி ஊழியர்கள் 42 நாய்களை பிடித்திருந்தனர். இந்த நாய்களை வெளியிடங்களிலோ, காட்டுப் பகுதியிலோ இறக்கிவிடப்படும் போது மீண்டும் வந்துவிடும் என்பதால் விராலிமலை ரோடு இலுப்பூர் தாலுகாவில் உள்ள பைரவர் நாய்கள் காப்பகத்தில் ஒப்படைத்து பராமரிக்க கேட்டுள்ளனர்.
இதே போல கிராமங்களிலும் ஏராளமாக சுற்றித்திரியும் நாய்களையும் பிடித்து காப்பகங்களில் வளர்க்கப்படுமானால், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் நாய்கள் கொல்லப்படாமலும் பாதுகாக்கப்படலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.