Skip to main content

நகராட்சி அலுவலகம் முற்றுகை; அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அதிரடி கைது

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Municipal office siege; AIADMK MLAs arrested

 

கோவை மாட்டம், மேட்டுப்பாளையம் நகர்மன்றக் கூட்டம், அதன் தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் நேற்று முன் தினம் (31-10-23) நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து பேசினர். அந்த வகையில், அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர், பொறியாளர்கள் வராதது குறித்தும், அவர்களது வார்டுகளில் குப்பைகளை அள்ளுவது தொடர்பாகவும் கேள்வி எழுப்பினர்.

 

இதில் அதிமுக மற்றும் திமுக க்வுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் தாக்கவும் முயற்சி செய்தனர். அப்போது திமுக கவுன்சிலர் ஒருவர் கூட்ட அரங்கில் இருந்த நாற்காலியை எடுத்து அதிமுக கவுன்சிலர்களை நோக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. 

 

மேலும், அதிமுக கவுன்சிலர்கள் சிலர் தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடக்கும் இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அதிமுக மற்றும் திமுக என இரு கட்சியினரும் மேட்டுப்பாளையாம் காவல்நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், இன்று (02-11-23) போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக கவுன்சிலர்களுக்கு ஆதரவாக அதிமுகவினர் அதிகளவில் திரண்டு வர இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸார் அந்த இடத்தில் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.செல்வராஜ் மற்றும் பி.ஆர்.ஜி. அருண்குமார் தலைமையில் அதிமுகவினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த இரு எம்.எல்.ஏ.க்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல், 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தை நடத்திய 8 அதிமுக கவுன்சிலர்களையும் அதிரடி கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

 

சார்ந்த செய்திகள்