நம் தமிழ்நாட்டில் ஒருவர் கவுன்சிலராகிவிட்டாலே ஸ்கார்பியோ, இனோவா , டாடா சபாரி என கார்களில் ஏ.சி.கண்ணாடியை லாக் செய்து கொண்டு உலாவரும் மக்கள் பிரதிநிதியைத் தான் பார்த்துக் கொண்டு வருகிறோம். ஆனால் ஒரு மாநகராட்சி மேயர் ஒருவர் பதவியில் இருக்கும் போதே பால் வியாபாரம் செய்து குடும்பம் நடத்துதுகிறார் என்றால் நம்பப முடிகிறதா?
அதிசயம், ஆச்சரியம் அது உண்மைதான்! ஆம் அவரை அந்த ஊர் மக்கள் "பால்கார மேயரம்மா" என்றுதான் அழைக்கிறார்கள். அவர் அந்தமாநகராட்சியின் மேயராவதற்கு முன் அங்கு வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு நேரிடையாக பால்கேனை எடுத்துக் கொண்டு போய் பால் வியாபாரம் செய்து வந்தார். அவர் சார்ந்த கட்சி அவருக்கு உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. போட்டியிட்ட அவர் மாநகர மேயராக வெற்றி பெற்றார். சரி மேயரான பின் அவர் செய்து வந்த வீடுகளுக்கு போய் பால் வியாபாரம் செய்யும் தொழிலை விட்டுவிட்டாரா என்றால் அது தான் இல்லை. மாநகர மேயராகி இரண்டு வருடமாகி விட்டது.
இப்போதும் ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு 300 வீடுகளுக்குச் சென்று பால் விநியோகம் செய்துவருகிறார். பாலுக்கான பணத்தோடு அந்த மக்கள் கொடுக்கும் போது கோரிக்கை மனுக்களையும் அவர்களிடம் பெறுகிறார் . அதற்குப்பிறகு தன் வீட்டுக்குச் சென்று வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு மாநகராட்சிக்கு கிளம்பிச் செல்கிறார். போகிற வழியில் மறக்காமல் அவர் சார்ந்துள்ள அந்த கட்சி அலுவலகம் சென்று தோழர்களுடன் அன்றாட நிகழ்வுகளை பேசி விட்டே அலுவலகம் செல்கிறார். அங்கு மாநகர மேயர் என்ற கருப்பு கவுனை அணிந்துகொண்டு மேயர் வேலைகளை தொடங்குகிறார்.
அதுசரி யார் அவர் ? எந்த ஊர்? அவர் பெயர் தோழிர் அஜிதா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியியை சேர்ந்தவர். (CPI) கேரள மாநிலம், திரிச்சூர் மாநகராட்சியின் மேயராக தோழர் அஜிதா எளிமையாக பணியாற்றி வருகிறார்.