தர்மபுரியில் ஆட்டோக்களை வெளியே எடுக்க முடியா வண்ணம் இரவோடு இரவாக கம்பி வேலி அமைத்த நகராட்சி நிர்வாகத்தின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பேருந்து நிலையத்தை கடந்த ஐந்தாண்டுகளாக சுமார் 5 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று முடிந்து இருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பென்னாகரம் பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதுநாள் வரை ஆங்காங்கே வீதிகளில் நிறுத்தி சவாரிகளை ஏற்றி இறக்கி வந்த 30க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தற்பொழுது பேருந்து நிலையம் பகுதியிலேயே நிறுத்த இடம் கேட்டிருந்தனர்.
காலியான இடத்தில்தான் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு 20-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது எந்தவித எச்சரிக்கையும் முன்னறிவிப்பும் வழங்காமல் திடீரென நகராட்சி நிர்வாகம் அந்த ஆட்டோக்களை சுற்றி இரவோடு இரவாக கம்பி வேலி அமைத்துள்ளது. கம்பி வேலியை விட்டு வெளியே எடுக்க கூட வழியில்லாமல் ஆட்டோ ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் அரசு அதிகாரிகளிடம் ஆட்டோ உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் முயன்று வருகின்றனர். ஆனால் அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை தினமாக இருப்பதால் அரசு தரப்பில் எந்த பதிலும் ஒத்துழைப்பும் தரவில்லை என ஆட்டோ ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர். நான்கு நாட்களாக ஆட்டோவை விட்டு விட்டு வீட்டுக்கு செல்ல முடியாமல் தீபாவளி நேரத்தில் தங்களுடைய வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.