முல்லைப் பெரியாறு அணையிலிருந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முல்லைப்பெரியாறு அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
குமுளியில் உள்ள தேக்கடி சுரங்க வாய்க்கால் ஷட்டர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகள் முன்னிலையில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் ஷட்டரை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார்.
கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11,807 ஏக்கர், போடிவட்டத்தில் 488 ஏக்கர், தேனிவட்டத்தில் 2,412 ஏக்கர் என தேனிமாவட்டத்தில் 14,707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது முல்லை பெரியாற்று நீரை நம்பியிருக்கும் இவ்விளை நிலங்களுக்கு, ஆண்டு தோறும் முதல் போக சாகுபடி நாற்று நடவுக்காக ஜூன் முதல் வாரம் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் முதல் போகத்திற்கு ஜூன் மாதம் திறக்க வேண்டிய தண்ணீர் தாமதமாகவே திறக்கப்பட்டது. இந்த ஆண்டும் ஜூன் மாதம் முதல் பெரியாறு அணையிலிருந்து முதல்போக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அணை நீர்மட்டம் குறைவாக இருந்தததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தாமதமாக பெய்ததால் தற்போது அணையின் நீர் மட்டம் 137 அடிவரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதை தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியாக இருந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி, தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள சுரங்க வாய்க்கால் ஷட்டர் பகுதியில் நடை பெற்றது.
முன்னதாக விவசாய சங்கத்தின் சார்பாக விவசாயம் செழிக்க பிரார்த்தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் ஷட்டரை இயக்கி வினாடிக்கு 300 கனஅடிவீதம் தண்ணீர் திறந்து விட்டார் இதில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் தமிழகப்பகுதிக்கு வரும் தண்ணீரில் மலர்தூவி வரவேற்றனர் இதில் பெரியாறு வைகை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் சுகுமாரன் பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் மொக்கமாயன், உதவி பொறியாளர்கள் கதிரேஷ்குமார், பிரேம் ராஜ்குமார், ராஜேஸ்வரன் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.