ஓசூரில், பட்டப்பகலில் இந்து மகாசபா நிர்வாகி ஒருவரை மர்ம நபர்கள் ஓட ஓட துரத்திச்சென்று வெட்டிக்கொன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - பாகலூர் சாலை சமத்துவபுரம் அடுத்துள்ள அனுமன் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (40). வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அகில பாரத இந்து மகாசபாவின் மாநில பொதுச்செயலாளராக இருந்தார். இவருடைய மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 3 மகள்களும் உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) காலை அவர், கடைக்கு சென்றுவிட்டு வருவதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் சென்றார். அப்போது சமத்துவபுரம் கேட் பகுதி அருகே வந்தபோது, அங்கே மறைந்து இருந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து, சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கத் தொடங்கியதுமே நாகராஜ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனாலும், அவரை ஓட ஓட துரத்திச் சென்று வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். அதற்குள் அப்பகுதி மக்கள் அங்கு ஓடிவந்தனர். அவர்களைப் பார்த்ததும் கொலை கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இதுகுறித்து ஹட்கோ காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நாகராஜின் சடலம், உடற்கூறாய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொழில் போட்டியா அல்லது முன்விரோதத்தால் நாகராஜ் கொல்லப்பட்டாரா? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்து மகாசபா நிர்வாகி ஒருவர், பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் ஓட ஓட துரத்திச்சென்று வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.