முல்லைப்பெரியாறு உள்பட கேரளா பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றுலாப் பயணிகள் சுற்றி பார்க்க ஹெலிகாப்டர் சேவைக்கான சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக- கேரள எல்லையான குமுளி, தேக்கடி பகுதியில் பெரியாறு அணை உள்ளது. அதுபோல் கண்ணகி கோவிலும் தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ளது. பெரியாறு அணையும், கண்ணகி கோவிலையும் பார்க்க சுற்றுலா பயணிகள் வந்து ரசித்து விட்டு போவது வழக்கம். இந்த நிலையில் சுற்றுலா பயணிக கேரளாவிலுள்ள எர்ணாகுளம், திருவனந்தபுரம், வயநாடு ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்திற்காக ஹெலிகாப்டர் சேவை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுபோல் எர்ணாகுளம், திருவனந்தபுரம், வயநாடு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் குமுளி, தேக்கடி, முல்லை பெரியார், கண்ணகி கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு ஒட்டகத்த மேட்டுக்கு வருவார்கள். இப்படி கேரளாவில் உள்ள சுற்றுலாத் தளங்களை ஹெலிகாப்டர் மூலமே சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்ப்பதற்காக தனியார் நிறுவனம் ஒன்று ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியுள்ளது.
அதற்கான சோதனை ஓட்டம் நேற்று குமுளியில் நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்கிய நிலையில், மதிய இரண்டு மணி வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. தற்பொழுது கரோனா பீதி மக்கள் மத்தியில் நிலவி வருவதால், அதனுடைய தாக்கம் தணிந்த பின்பு இந்த ஹெலிகாப்டர் சேவை தொடரும் என அந்த தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. ஹெலிகாப்டர் மூலம் கேரளாவில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டிருப்பதைக் கண்டு தமிழக- கேரளா மக்கள் மத்தியில் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் உற்சாகமும் நிலவி வருகிறது.