தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் ஜூலை மாதம் 18 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவிற்கு தலா மூன்று இடங்களும், திமுகவிற்கு தலா மூன்று இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த இரு கட்சிகளின் கூட்டணி கட்சிகளும் ராஜ்ய சபா எம்பி பதவியை பெற தீவிரம் காட்டி வருகின்றனர். அதே போல் திமுக, அதிமுக கட்சிகளில் உள்ள தலைவர்களும் ராஜ்ய சபா எம்பியாக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம் காங்கிரஸ் கட்சியும், திமுக கட்சியிடம் ஒரு ராஜ்ய சபா சீட் கேட்டுவருதாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் இந்த மாதம் நிறைவடைந்தது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக கட்சி ஆட்சி செய்து வருவதால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மாநிலங்களவையில் இடம் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தமிழகத்தில் இருந்து திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங்கை இடம் பெற செய்ய அக்கட்சி அதிக முயற்சி எடுத்து வருகிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவிற்கு ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் என திமுக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கட்சியும் மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த கட்சியின் மூத்த தலைவர்களை ராஜ்ய சபா எம.பியாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் ராஜ்ய சபா எம்பி பதவியை பெற அதிமுக தலைமையிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த இரு கட்சிகளும் ராஜ்ய சபா எம்பி பதவியை யாருக்கு வழங்குவது தொடர்பாக குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இன்றோ, அல்லது நாளையோ அதிமுக, திமுக கட்சிகள் ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்போது தெரிந்து விடும், கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்குகிறதா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.