Skip to main content

350 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு; வேளாண்துறை அமைச்சர் பங்கேற்பு

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

 mrk panneerselvam participated in a community baby shower for 350 pregnant women

 

சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

 

விழாவில் ஒருங்கிணைந்த திட்ட வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் த.பழனி வரவேற்றார். சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன் முன்னிலை வகித்தார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்துப் பேசினார். 

 

விழாவில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து 350 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை உள்ளிட்ட சீர்வரிசை மற்றும் தலா ஊக்கத் தொகை ரூ.500 வழங்கி சிறப்புரையாற்றி பேசுகையில், “குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பது அல்லது வயதிற்கேற்ற உயரத்துடன் வளர்ச்சி இல்லாமல் இருப்பது போன்றவற்றை நாம் கவனிக்காமல் விட்டால் எதிர்காலத்தில் அவர்கள் ஆரோக்கிய குறைபாட்டுடன் வேலை செய்யும் திறன் குறைந்தவர்காளாக இருப்பார்கள்.

 

 mrk panneerselvam participated in a community baby shower for 350 pregnant women

 

இதனைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நலத்திட்டங்களை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கி வருகிறது. சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு கர்ப்பிணி தாயும் ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்க கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார முறை. ஊட்டச்சத்து உணவு முறை, மருத்துவ பரிசோதனைகளின் அவசியத்தை தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

ஏழை எளிய பெண்கள் தங்களுக்கு வளைகாப்பு நடத்துவதற்கான வசதிகள் இல்லாத நிலையில் கவலை கொள்ளக்கூடாது என்ற அடிப்படையில் தமிழக அரசு தாயுள்ளத்தோடு ஒவ்வொரு ஆண்டும் வளைகாப்பு விழா நடத்துகிறது. இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள 1400 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

 

விழாவில் காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் ம. சிந்தனைசெல்வன், சிதம்பரம் நகரமன்ற துணைத் தலைவர் எம். முத்துக்குமார், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் ஹிரியன் ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். விழாவில் பொதுக்குழு உறுப்பினர் கே.பி.ஆர். பாலமுருகன், கடலூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் த. ஜேம்ஸ் விஜயராகவன், நகரமன்ற உறுப்பினர்கள் அப்பு சந்திரசேகரன், ஏ.ஆர்.சி. மணிகண்டன், லதா, கல்பனா, மாவட்ட பிரதிநிதி வி.என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, நகர துணைச் செயலாளர் பா. பாலசுப்பிரமணியன், ஆர். இளங்கோ, இளைஞரணி மக்கள் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கீரப்பாளையம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கோ. செல்வமணி நன்றி கூறினார். விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு வடை பாயசத்துடன் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்