சிதம்பரம் நகரத்தில் ஞானப்பிரகாசம் குளம், குமரன் குளம், பெரியண்ணா குளம் உள்ளிட்ட ஆறு குளங்கள் ரூ. 6 கோடியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெரியண்ணா குளம் பணிகள் முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீரமைக்கப்பட்டு வரும் குளம் பணிகளைத் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழைக் காலத்திற்கு முன்பு பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நகருக்கு வரும் பேருந்து மற்றும் வாகனங்களால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையொட்டி 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ. 40 கோடியில் தனியாகச் சாலை அமைக்கும் இடத்தை ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து உழவர் சந்தை பகுதியில் ரூ. 5 கோடியில் அனைத்து வசதிகளுடன் காய்கறி சந்தை அமைக்கப்படுகிறது. அதன் பணிகளை ஆய்வு மேற்கொண்ட அவர் சிதம்பரம் புறவழிச் சாலையில் சட்டமன்ற 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் ஸ்டாலின், மறைந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் எல். இளையபெருமாளுக்கு நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தமிழக ஆளுநர் தான்தோன்றித்தனமாக செயல்படுவதாகவும் அதற்கு சரியான எதிர் நடவடிக்கையாக தமிழக முதல்வர் செயல்படுகிறார். இதனால் ஆளுநர் தற்போது பின்வாங்கி உள்ளார். பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் ஆளுநர் இதுபோன்று காரியங்களை செய்து வருகிறார். அதற்கு தமிழக முதல்வர் தக்க பாடம் புகட்டி வருவதாகக் கூறினார். நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், உதவி ஆட்சியர் சுவேதா சுமன், சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி, நகர் மன்றத் தலைவர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.