கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேர் தன்னை மிரட்டி போலி ஆவணங்கள் பதித்து 22 ஏக்கர் நிலத்தை பறித்து கொண்டதாக கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது சகோதரர் என 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், போலி ஆவணங்கள் வழங்கி பத்திரப்பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 7 பேர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடும் என்று நினைத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், இரண்டு முறை கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. அதே சமயம் எம்.ஆர். விஜயபாஸ்கர் தங்கியிருக்கும் வீடு, அலுவலகம் என அவருக்கு தொடர்புடைய 12 இடங்களில் இன்று (07.07.2024) சிபிசிஐடி காவல்துறை சோதனை நடத்தினர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 12 இடங்களில் சிபிசிஐடி போலீசார் 8 மணி நேரமாக நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில் பென்டிரைவ் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் (05.07.2024) எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 3 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.