ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதே சமயம் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றுள்ளது. புதுச்சேரியின் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். முன்னதாக இந்நிகழ்ச்சிக்காக திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வருகை தந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பட்டாசுகள் வெடித்தும், மலர் தூவியும், மேளதாளத்துடன் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், “வெற்றி வாகை சூடியவர்களும் அவர்களது வெற்றிக்கு அடித்தளமிட்ட தொண்டர்களும் அண்ணா அறிவாலயத்தில் ஒன்றுகூடி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.