Skip to main content

எம்.பி. வைத்திலிங்கம், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆதரவாளர்களோடு ரகசிய ஆலோசனை...!

Published on 12/10/2020 | Edited on 12/10/2020

 

MP Vaithiyalingam, Minister Vellamandi Nadarajan secret consultation with supporters ...!

 

 

அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும், எம்.பி வைத்திலிங்கமும் தங்களது ஆதரவாளர்களோடு தஞ்சையில் ரகசியமாக சந்தித்து நீண்ட நேரம் பேசியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

 

அதிமுகவில் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற சர்ச்சை கடந்த 7ஆம் தேதி முடிவுக்கு வந்தது. சிட்டிங் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சர் வேட்பாளர் என அறிவித்ததோடு, 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவையும் நியமித்தனர். அந்த குழுவிலும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களே ஒருபடி மேலே இருந்தனர். டெல்டா மாவட்டத்தில் அமைச்சர் காமராஜுக்கு இடம் கொடுக்கப்பட்டது. ஆனால் அது சீனியர் கட்சிக்காரர்கள் இடையே முனுமுனுப்பையும் உண்டாக்கியது. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அமைச்சர்களுக்கும் நெருடலை உண்டாக்கியது.

 

முதலில் சில கோரிக்கைகளை வைத்து பிரச்சனைகளை முன்னிருத்திய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மேல்மட்ட கெடுபிடியாலும், தனது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் கிடைக்கவேண்டிய பொறுப்புக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதாலும், இந்த தேர்தல் மிக சவாலான தேர்தல் அதனால், எதுவும் நடக்கலாம். திமுகவிற்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. வீண் கெட்ட பெயர் எதற்கு, கட்சியை கைபற்றினால் ஆட்சிக்கு எப்போது வேண்டுமானாலும் வந்துவிடலாம்,  என அவரது தீவிர ஆதரவாளர்கள் கூறியதன் முடிவாக, முதல்வர் வேட்பாளர் எடப்பாடி தான் என ஆதரவு தெரிவித்தார்.

 

இந்த நிலையில் 2016-ல் நடந்த சட்டசபை தேர்தலில் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனாலும் அவருக்கு ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பி. சீட் வழங்கினார். மத்திய அமைச்சரவையில் அங்கம் கிடைக்கும் என வெகுவாக நம்பியிருந்தவருக்கு ஓ.பன்னீர்செல்வமே மறைமுகமாக முட்டுக்கட்டையாக நின்றார். அதன்பிறகு தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்போது தமிழகத்தில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாகவும் பரவலாக பேசப்பட்டுவருகிறது. பன்னீர்செல்வம் தனது மகனுக்கு காய்நகர்த்திவருகிறார். 

 

இந்த நிலையில்தான் தஞ்சை சுற்றுலா மாளிகையில் தனது ஆதரவாளர்களுடன் எம்.பி வைத்தியலிங்கம் நேற்று ரகசியமாக ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் அங்கு வந்து வைத்தியலிங்கத்தை சந்தித்து நீண்ட நேரம் தனியாக பேசினார், அதன்பின்பு அங்கிருந்து புறப்பட்டார். இருவரும் திடீரென தனியாக சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே தஞ்சை அதிமுக வட்டாரத்தினால் பேசப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்