14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு தடை விதித்துள்ளது தமிழக அரசு. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த பாடலாசிரியர் எம்.எஸ்.மதுக்குமார் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இப்பாட்டின் வெளியீட்டு விழா மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் பொன்னம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
''பை தூக்க மலைச்சாக்கா மக்களே... எதிர்காலம் ரொம்ப ரொம்ப சிக்கலே'' என்ற பாடலை ஷைனி மற்றும் ஜார்ஜ் பாட ஈரோடு சாம் இசையமைத்திருந்தார். மடைவாசல் குழுவை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங், பிரபாகர், கார்த்தி, காட்வின் மற்றும் சுசி ஒருங்கிணைத்திருந்தனர்.
செயல் அலுவலர் சாகுல்ஹமீது, டாக்டர் சுப்புராம் ஆகியோர் தலைமையில் ஆடியோவை பள்ளி மாணவிகள் வெளியிட்டனர். இந்த பாடலின் யூடூப் பதிவினை துப்புரவு தொழிலாளர்கள் வெளியிட்டனர்.
பிளாஸ்டிக் தவிர்ப்பு சம்பந்தமான கும்மிப்பாட்டு, பேச்சு போட்டி என களைகட்டிய இந்த நிகழ்வை பற்றி பாடலாசிரியர் எம்.எஸ்.மதுக்குமார் பேசியபோது,
''அரியலூர் மாவட்டம் செந்துறையைச் சேர்ந்தவன் நான். ரொம்ப சந்தோஷமா இருக்கு. 2015 முதல் பொன்னம்பட்டி பேரூராட்சி பிளாஸ்டிக் பொருளுக்கு எதிராக போராடிவருகிறது என்பதையறிந்து இந்த மக்களை கௌரவிக்கும் விதமாக பாடலை இங்கு வெளியிட முடிவு செய்தோம். இந்த பாடலை பெருநகர மற்றும் அனைத்து கிராம ஞ்சாயத்து அலுவலர்கள் மூலம் கொண்டு செல்ல அரசு உதவவேண்டும்.
இதனால் நெகிழியால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் விரைவில் உணர்ந்து மாற வாய்ப்பு உண்டு. மேலும் கோடிக்கணக்கில் செலவு செய்து விளம்பரம் எடுப்பதை காட்டிலும் இந்த பாடலை மக்கள் கூடும் கடைவீதி, பேருந்து நிலையம், இரயில்நிலையம் மற்றும் பள்ளிகளில் ஒலிபரப்புபதும், இதன் வீடியோ பதிவை போட்டு காட்டுவதும் மிகவும் எளிது. மனமிருந்தால் மார்கம் உண்டு'' என்றார்.