தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா பேசும்போது, “சனாதனத்தை டெங்கு மலேரியா, கொரோனா போல ஒழிக்க வேண்டும் என்று மென்மையாகத்தான் சொன்னார். மலேரியா, டெங்கு நோய்களை சமூகம் அறுவறுப்பாகப் பார்க்கக் கூடாது. ஆனால் ஒரு காலத்தில் எச்.ஐ.வி அறுவறுப்பாகப் பார்க்கப்பட்டது. ஆகையால் எங்களைப் பொறுத்தவரையில் தொழுநோய், எச்.ஐ.வி போல் சமூக அவலம் நிறைந்த நோயாகத்தான் சனாதனத்தைப் பார்க்க வேண்டும்” என்றார்.
இந்த நிலையில் சனாதனத்தைத் தொழு நோய் மற்றும் எச்.ஐ.வி நோயுடன் ஒப்பிட்டுப் பேசியதாக ஆ. ராசா மீது டெல்லி வழக்கறிஞர் வினித் ஜிண்டால் டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாகக் கூறி அமைச்சர் உதயநிதி மீது பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆ. ராசா எம்.பி மீது புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.