தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வீட்டின் ஜன்னல்களை குறிவைத்து அதன் வழியே திருட்டுக்களை அரங்கேற்றும் ஜன்னல் திருடர்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரியல் எஸ்டேட் நிறுவனர் ஒருவரின் வீட்டில் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டிலிருந்து பத்து சவரன் நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். கிருஷ்ணா நகரில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையில் ஜன்னலை குறிவைத்து திருட்டை அரங்கேற்றும் இந்த கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அக்கம் பக்கத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அதே பகுதியில் மூன்று வீடுகளின் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்றது தெரியவந்துள்ளது. முகத்தை முழுமையாக துணியால் கட்டி மறைத்துக் கொண்டு, அரைக்கால் சட்டை அணிந்தபடி நடமாடும் அந்த நபர் வீட்டில் திறந்து இருக்கும் ஜன்னல்களைக் குறிவைத்து திருட்டை அரங்கேற்ற திட்டமிடுவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ச்சியாக இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.