தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னத்தாய். இவரது மகன் மணிபாலன். மின்னணு சாதனங்கள் நிபுணர் என்று வெளிநாட்டில் வேலை இருப்பதாகக் கூறி சேப்டி யூனியன் காண்ட்ராக்ட்டிங் கம்பெனி என்ற நிறுவனத்தின் மூலமாக சவுதி அரேபியாவிற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் என்ன வேலை செய்தார் என்று தெரியவில்லை. அவரது விசா காலம் 15.10.2023 அன்றுடன் முடிந்துவிட்டது. ஆனால் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம் அவரது விசாவை நீட்டிப்புச் செய்ய எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
இதனால் அவர் அங்கு வேறு இடத்தில் பணிக்கோ உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற வெளியில் கூட செல்ல முடியவில்லை. அவர் ஓரிடத்தில் முடங்கிக் கிடப்பதோடு அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டும், கையில் பணமில்லாமல் மன உளைச்சல் ஏற்பட்டு கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்ததுபோல் தனித் தீவு ஒன்றில் புலம்பிக் கொண்டிருப்பதாகவும், அன்றாடம் நெருக்கடிகள், பசி, பட்டினியால் அழுது புலம்புவதாகத் தனது தாயிடம் செல்போனில் கதறி அழுதுள்ளார்.
மேலும், தன்னை எப்படியாவது தாய் நாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யக் கேட்டு கண்ணீரும் கதறலுமாய் திரிவதை வீடியோவாகத் தனது தாய்க்கு அனுப்பியிருக்கிறார். இதனால் உறைந்து போனது மணிபாலனின் குடும்பம். தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்து மகனை எப்படியாவது இந்தியாவிற்கு மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீரும் கம்பலையுமாய் கதறியிருக்கிறார் தாய் அன்னத்தாய். தவிர வீடியோ ஒன்றில் வேதனையாக, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார். நிலை குலைந்துபோயிருக்கிறது மணிபாலனின் குடும்பம்.