கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நகையை பறித்ததாக கடந்த 2019 -ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் பல பெண்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது சில வீடியோக்கள் மூலம் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் திருநாவுக்கரசு என்கிறவன் முக்கிய குற்றவாளியாகவும், அதைத் தொடர்ந்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் என மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது.
தொடர்ந்து இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், மொத்தமாக 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட போராட்டங்களின் விளைவாக இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், வசந்தகுமார், சதீஷ், அருளானந்தம், ஹெரன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பான வழக்கு காணொளி காட்சி வாயிலாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு இன்று சேலம் மத்திய சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு 9 பேரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நடைபெற்று வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை தவிர்த்து வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த வழக்கில் சேகரிக்கப்பட்ட கூடுதல் வீடியோ ஆதாரங்கள் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. குறிப்பாக இன்றைய தினம் 30 வீடியோக்கள் உள்ளிட்ட பல ஆதாரங்கள் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.