தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இருப்பினும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, திருப்பூர், கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் இன்று (29/04/2021) ஆலோசனை நடத்துகிறார். இதில், கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடு விதிப்பது பற்றி தலைமைச் செயலாளர் ஆலோசிக்க உள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நேற்று (28/04/2021) மாலை தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்த நிலையில், இந்த ஆலோசனை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.