சிதம்பரம் அருகே கிள்ளையில், மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினப் பெண்கள் 2 பேரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் செய்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த கிள்ளை பேரூராட்சி மன்றத் தலைவர் மல்லிகா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினரும் கிள்ளை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவருமான கிள்ளை ரவீந்திரன் கலந்துகொண்டு, மணிப்பூரில் நடைபெறும் கலவரம் மற்றும் பழங்குடிப் பெண்களை நிர்வாணமாக்கிய சம்பவத்தைக் கண்டித்தும், இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத மோடி அரசைக் கண்டித்தும் உரையாற்றினார்.
இதில் கிள்ளை, தளபதி நகர், எம் ஜி ஆர் நகர், சிசில் நகர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட பகுதிகளில் வசிக்கும் 400க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டனக் கோஷங்களை எழுப்பினார்கள். முன்னதாகக் கிள்ளை கடைத்தெரு பகுதியிலிருந்து அஞ்சல் அலுவலகம் வரை அனைவரும் பேரணியாகச் சென்று அஞ்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஒன்றிய மோடி அரசைக் கண்டிக்கும் வகையில், இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காகக் கிள்ளை பகுதியில் வசிக்கும் 800க்கும் மேற்பட்ட பழங்குடியினக் குடும்பங்களில் உள்ளவர்கள் ஒரு நாள் வேலைக்குச் செல்லாமல் அவர்கள் வசிக்கும் வீடு மற்றும் அங்குள்ள பொது இடங்களில் கருப்புக் கொடி ஏற்றிக் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.