மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று 40-க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவர் காவிரி தனபாலன் கூறியதாவது, “மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவது நல்லதல்ல. விவசாயிகளிடம் விளையும் விலை பொருட்களை வாங்கி, மறு இடத்தில் பல மடங்கு விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.
விவசாயிகள் போராட்டத்துக்கு நீதிமன்றம் தலையிட்டு, நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதுவரை எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது, மத்திய அரசு வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும். காவல்துறை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளித்தது. பின்னர் பந்தல் போடக் கூடாது எனத் தடை விதிக்கிறது. இதனால் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கடும் வெயிலில் காய்ந்து வருகிறோம்.
டெல்லியில் 28ஆவது நாளாக நடைபெறும் போராட்டத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருப்பது குறித்த கேள்விக்கு, நாங்கள் மனதார வரவேற்கிறோம். நாங்கள் டெல்லியில் போராடியபோது விளம்பரமின்றி விவசாயிகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தவர்.
அதேபோல ஜி.கே.வாசன், விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் டெல்லியில் போராடிய எங்களுக்கு உணவு அளித்து ஆதரவுக்கரம் நீட்டினர். மத்திய அரசு உடனடியாக சட்டத்தைத் திரும்பப்பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.
- நமது நிருபர்