சென்னையில் ஒரே அறையில் 20க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மண்ணடி மலையப்பன் தெரு பகுதியில் பேக் தைக்கும் கடையில் பீகாரை சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு மூன்று நேரம் உணவளித்து வேலை வாங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜெயலட்சுமியின் உத்தரவின் பேரில் காவல்துறையின் உதவியுடன் அதிகாரிகள் சென்று அடைத்து வைக்கப்பட்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட சிறுவர்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட அனைவரும் 10 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் பீகார் மாநிலத்திலிருந்து கடந்த மாதம் சென்னை கொண்டுவரப்பட்டு பேக் தைக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கடையின் உரிமையாளரிடம் தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களது சொந்த மாநிலத்திற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவர் என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.