சிதம்பரம் நகரத்தின் 68 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த காசு சிதம்பரம் கிளை நூலகம் முதலில் காசுகடைத்தெரு, பின்னர் சின்ன காஜியார் தெருவில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அந்தக் கட்டிடம் பழுது ஏற்பட்டு மழைக்காலங்களில் மழை நீர் ஒழுகி பல லட்ச எண்ணிக்கையில் இருக்கும் புத்தகங்கள் வீணாகும் சூழல் ஏற்பட்டது. மேலும், நூலகத்திற்கு ஏற்ற சரியான இடவசதி இல்லாததால் நூலகத்தை அரசு இடத்தில் நவீன முறையில் அமைக்க வேண்டும் எனத் தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை தொடந்து 2014-ல் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போது மாநில செயலாளராக இருக்கும் கே. பாலகிருஷ்ணன் அதே நேரத்தில் சிதம்பரம் நகர மன்றத் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த பெளஜியா பேகம் இருந்த போது, நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே நகராட்சிக்கு சொந்தமான 4 ஆயிரம் சதுர அடி காலி இடத்தை நூலகம் கட்டுவதற்கு இலவசமாக தர வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதனடிப்படையில் அப்போதிருந்த நகர்மன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தீர்மானத்தின் பெயரில் 2014- ஆம் ஆண்டு நூலகம் கட்ட 4 ஆயிரம் சதுர அடி இடம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிளை நூலகமாக செயல்பட்ட நூலகம், வருவாய் கோட்ட நூலகமாக தரம் உயர்த்தப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நூலகம் கட்ட அதிமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால், நூலகம் கட்டமுடியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சிதம்பரம் சார் ஆட்சியராக பணியாற்றிய மதுபாலன் சிதம்பரத்தில் நவீன முறையில் நூலகம் அமைய வேண்டும் என்ற நோக்கில் நமக்கு நாமே திட்டம் மூலம் சிதம்பரம் பகுதியில் உள்ள வணிகர்கள் சங்கம், நகை வியாபாரிகள் சங்கம், பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து நூலகம் கட்டுவதற்கு மக்கள் பங்களிப்பு நிதியாக ரூ 16 லட்சம் நிதி திரட்டினார் .பின்னர் அவர் பணி உயர்வு பெற்று மதுரைக்கு சென்றுவிட்டார்.
இதனை தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுக்கு முன் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நூலகம் கட்ட நமக்கு நாமே திட்டத்தில் ரூ 32 லட்சம் மாணியமாக அரசு வழங்கியதால் மொத்தம் ரூ 48 லட்சத்தில் 1800 ச.அடியில் நூலகத்திற்கு தரைதளம் நவீன முறையில் கட்டப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 5-ந்தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நூலகத்தை திறந்து வைத்தார். இதனையொட்டி நூலகத்திற்கான சாவியை சம்பந்தபட்ட நூலகத்துறை ஆலுவலர்கள் அருள் மற்றும் ரகுநந்தனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதிய நூலக கட்டிடத்தில் ஜன 12-ந்தேதி மாலை நடைபெற்றது.
இதில் சிதம்பரம் நகர் மன்ற தலைவர் கே.ஆர் செந்தில்குமார் கலந்து கொண்டு நூலக சாவியை வழங்கினார். நகர்மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன், நகராட்சி ஆணையர் பிரபாகரன், பொறியாளர் மகாராஜன், நகர் மன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், ராஜன், கல்பனா மற்றும் திமுக நகர துணைச்செயலாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள், நகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.