நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.
அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.
இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது.