வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா போலீசார் சென்னை டூ பெங்களூரு தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலையில் செப்டம்பர் 29ஆம் தேதி இரவு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பள்ளிகொண்டாவை அடுத்த சின்ன கோவிந்தம்பாடி பகுதியில் சாலையின் ஒதுக்குப்புறமான இடத்தில் ஒருலாரி மற்றும் கார் நிற்பதை ரோந்து போலீஸார் கண்டனர்.
காரிலிருந்த போலீஸார் இறங்கி அங்கு சென்று கார் மற்றும் லாரியில் சோதனை நடத்தினர். அதில் ஒரு டிராவல் பேக்கில் கட்டு கட்டாக பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அங்கிருந்த 4 பேரை தங்களது கஸ்டடிக்கு கொண்டு வந்தனர். உயர் அதிகாரிகளுக்கு தகவல் தந்தவர்கள் சம்மந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், “சென்னையில் இருந்து கார் மூலம் 48 கட்டுகளில் 10 கோடி ரூபாய் பணத்தை கொண்டு சென்றோம். வழியில் சோதனை அதிகமாக இருப்பதால் காரில் இருந்து லாரிக்கு மாற்றச்சொன்னார்கள். அதனால், பணத்தை மாற்றினோம்” எனக் கூறியுள்ளார்கள். அது யாருடைய பணம், மாற்றச்சொன்னது யார் என்கிற தகவலை சம்மந்தப்பட்டவர்கள் சொல்லியும் அதனை காவல்துறை தரப்பு வெளியே சொல்ல மறுக்கிறது.
கைது செய்யப்பட்டு, பள்ளிகொண்டா காவல்நிலையத்தில் வைக்கப்பட்டவர்களில் 2 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், ஒருவர் மதுரையை சேர்ந்தவர், லாரி டிரைவர் கேரளாவை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.