'மொய் விருந்து..' இந்த வார்த்தை புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரபலமான வார்த்தை. பலருக்கான வாழ்வாதராம். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடியிலும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் ஆவணியிலும் மொய் விருந்துகள் நடப்பது வழக்கம். ஆனால் தற்போது ஆனி முதல் வாரத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கிவிட்டது.
புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் கடந்த 35, 40 வருடங்களாக நடக்கும் இந்த மொய் விருந்துகளால் பலரது பொருளாதாரம் உயர்வுக்கும் வழி வகுக்கிறது. டன் கணக்கில் ஆட்டுக்கறி, குவியல் குவியலாக சோறு, தலைவாழை இலையில் ஆப்பைக்கறி பரிமாறும் போது வரும் கமகம கறிக்குழம்பு வாசனை பலரையும் இழுத்து வரும். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், வடகாடு, அணவயல், மேற்பனைக்காடு என சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆடி முதல் தேதியில் தொடங்கி கடைசி தேதி வரை சுமார் 500 முதல் ஆயிரம் பேர்கள் வரை கூட்டாக மொய் விருந்து வைத்து கோடிக்கணக்கில் மொய் வசூல் செய்த மகிழ்ச்சியான காலத்தை கஜா புயலும், கரோனாவும் புரட்டிப் போட்டுவிட்டது. அதன் பிறகு போட்ட மொய்யாவது வந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.
இந்த ஆண்டு ஆடி மாதம் தொடங்க வேண்டிய மொய் விருந்து ஒரு மாதம் முன்னதாக ஆனி மாதமே தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் முதல் மொய் விருந்து கீரமங்கலத்தில் நடந்தது. இதனையடுத்து ஆனி, ஆடி இரு மாதங்களும் கீலமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் மொய் விருந்துகள் நடக்கும் என்கின்றனர். ஆனால் மொய் வசூல் மந்தமாகவே உள்ளதாகவும் கூறுகின்றனர். காரணம் விவசாயிகளிடம் போதிய வருவாய் என்பதே..