காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை சேலத்தில் தீயிட்டு எரித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில், மத்திய அரசு மூடி முத்திரையிட்ட வரைவு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதில், மேலாண்மை வாரியம் தொடர்பான தகவல்கள் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியானது. இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, வெற்று வரைவு அறிக்கையை வெளியிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரைக் கண்டித்து சேலத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று (மே 14, 2018) மாலை 3.45 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வைக்கோல் மற்றும் துணியால் ஆன மோடியின் உருவப்பொம்மையை அந்த அமைப்பின் நிர்வாகிகள் திடீரென்று அங்கு கொண்டு வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் உருவபொம்மைக்கு தீவைத்து எரித்தனர். இதுகுறித்து தாமதமாக தகவல் அறிந்த சேலம் நகர காவல்துறையினர், எரிந்து கொண்டிருந்த உருவபொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
மேலும், ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அந்த உருவபொம்மையை செருப்பால் அடித்தனர். 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க துப்பில்லாத மத்திய அரசே மோடியே உடனடியாக பதவி விலகு' என்று முழக்கமிட்டனர்.
இதுகுறித்து ஜனநாயக வாலிபர் சங்க ஒருங்கிணைப்பாளர் பிரவீண்குமார் கூறுகையில், ''தமிழக மக்கள் பாதிக்கக்கூடிய வகையில காவிரி விவகாரத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. வரைவுத்
திட்ட அறிக்கையில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. மேலும், அணைகள் எல்லாம் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும், தண்ணீர் தர மறுக்கும் மோடி அரசைக் கண்டித்து இந்த போராட்டத்தை நடத்தி இருக்கிறோம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, காவிரி நீர் உரிய முறையில் கிடைக்க நேர்மையான
நிர்ப்பந்தத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு கொடுக்க வேண்டும். எடப்பாடி அரசு மோடிக்கு ஜால்ரா போடுவதை நிறுத்திவிட்டு, தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், மோடிக்கு தமிழ்நாட்டில் என்ன நடந்தததோ அதுதான் எடப்பாடிக்கும் நடக்கும்,'' என்றார்.