Skip to main content

அரசுப் பள்ளிகளை அடியோடு ஒழிப்பதற்கு மோடி அரசு திட்டம்: வைகோ கண்டனம்

Published on 30/08/2017 | Edited on 30/08/2017

அரசுப் பள்ளிகளை அடியோடு ஒழிப்பதற்கு மோடி அரசு திட்டம்: வைகோ கண்டனம்

ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மற்றும் பழங்குடி இன பட்டியல் இன மக்கள் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்கும் நிலையை அடியோடு ஒழிப்பதற்கு மோடி அரசு திட்டமிடுவது ஆபத்தானது ஆகும். மத்திய அரசுக்கு நிதி ஆயோக்  அளித்து வரும் மக்கள் விரோத பரிந்துரைகளை புறந்தள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பாரதிய ஜனதா கட்சியின் அரசு அமைந்தவுடனே பிரதமர் மோடி மேற்கொண்ட முதல் நடவடிக்கை, நேரு உருவாக்கிய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, ‘நிதி ஆயோக்’ அமைப்பை ஏற்படுத்தியதுதான். தனியார் மயம், தாராளமயத்தை தீவிரமாக செயல்படுத்த நிதி ஆயோக் தான் மோடி அரசுக்குத் தேவையான அனைத்துப் பரிந்துரைகளையும் வழங்கி வருகிறது.

வேளாண் கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது; வேளாண்மைத் துறைக்கான மானியங்கள், உணவுத்துறைக்கான மானியங்களை இரத்து செய்தல், பொது விநியோகத் திட்டத்தை அடியோடு மூடுதல், பொது சுகாரதாரத்துறைக்கு அரசின் முதலீடுகளை முற்றாக இரத்து செய்துவிட்டு, தனியாரிடம் தாரை வார்த்தல் போன்ற மக்கள் விரோத பரிந்துரைகளை நிதி ஆயோக் அளித்து வருகிறது. இவற்றை நடைமுறைப்படுத்திட மோடி அரசு தீவிரமாக செயல்படுகிறது. தற்போது கல்வித் துறையை தனியார் மயமாக்கிட ஆபத்தான ஒரு பரிந்துரையை நிதி ஆயோக் மத்திய அரசுக்கு அளித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கான திட்ட அறிக்கையை நிதி ஆயோக் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிட்டு இருக்கிறது. இதில் “2010-2014 ஆம் ஆண்டில் 13,500 அரசுப் பள்ளிகள் அதிகரித்துள்ளது. எனினும் அரசுப் பள்ளிகளில் ஒரு கோடியே 13 இலட்சம் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. ஆனால் தனியார் பள்ளிகளில் ஒரு கோடியே 65 இலட்சம் மாணவர்கள் சேர்ககை அதிகரித்துள்ளது.

2014-15 ஆம் கல்வி ஆண்டில் 3 இலட்சத்து 70 ஆயிரம் பள்ளிகளில் வெறும் 50க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். எனவே சரியாக செயல்பட முடியாத நிலையில் உள்ள அரசு பள்ளிகளை தனியாருடன் இணைந்து செயல்படுத்த அரசு முன்வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.

நரேந்திர மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியில் கல்வித்துறை காவிமயமாகி வருவது மட்டுமின்றி, வர்த்தக மயம் ஆக்குவதற்கும் மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது. மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்திலும் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வருகிறது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2013-14 நிதி நிலை அறிக்கையில் கல்வித்துறைக்கு மொத்த பட்ஜெட் தொகையில் 4.5 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 2017-18 வரவு செலவு திட்டத்தில் கல்வித்துறைக்கு வெறும் 3.8 விழுக்காடு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

1966 இல் கோத்தாரி ஆணையம் அளித்த பரிந்துரையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ழுனுஞ)6 விழுக்காடு கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், 50 ஆண்டுகளாக அந்த இலக்கை இன்னும் அடைய முடியவில்லை.

2014 -15 ஆம் ஆண்டில் கல்வித்துறைக்கு மத்திய பா.ஜ.க. அரசு 45,722 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைவிட 1,134 கோடி ரூபாய் குறைவு ஆகும். 2015-16 இல் 42,187 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. இதுவும் முந்தை ய ஆண்டைவிட 3,535 கோடி ரூபாய் குறைவு ஆகும்.

நிதி ஆயோக் பரிந்துரையின் பேரில் மற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக பள்ளிகளை தனியார் -அரசு பங்களிப்பு திட்டத்தின் மூலம் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் நடைமுறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கல்வித்துறையை முழு சுயாட்சி அதிகாரம் உள்ள அமைப்பாக மாற்றி, தனியார் நிறுவனங்களிடம் பள்ளிகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூறி வருகிறது.
கல்வித்துறை மத்திய -மாநில அரசுகளின் பொது அதிகார பட்டியலின் கீழ் வருவதால், மாநில அரசுகளின் உரிமையை பறிப்பது மட்டுமின்றி, பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பான இந்தியாவில், பா.ஜ.க. அரசு ஒரே கல்வி முறையை செயல்படுத்திடவும், ஏகபோக ஆதிக்கம் செலுத்தவும் முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.

ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மற்றும் பழங்குடி இன பட்டியல் இன மக்கள் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்கும் நிலையை அடியோடு ஒழிப்பதற்கு மோடி அரசு திட்டமிடுவது ஆபத்தானது ஆகும். மத்திய அரசுக்கு நிதி ஆயோக்  அளித்து வரும் மக்கள் விரோத பரிந்துரைகளை புறந்தள்ள வேண்டும்.

அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்தி தரம் உயர்த்திடவும், பொதுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தவும் மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்