இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக தூத்துக்குடியில், நடைபெற்ற திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல் சேவையை தொடங்கி வைத்தார். அதேபோல் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளத்திற்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 4,586 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு சாலை திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. முன்னேற்றம் அடைந்த இந்திய வரைபடத்தின் எடுத்துக்காட்டு தான் இந்த நிகழ்ச்சி. மத்திய அரசின் துறைமுகம் சார்ந்த திட்ட முதலீடுகளால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கோரிக்கைகளாக மட்டுமே இருந்த திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று தொடங்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் படகு சேவை காசியில் கங்கை நதியிலும் பயணிக்க இருக்கிறது. தூத்துக்குடியில் வ.உ.சி துறைமுகம் விரிவுபடுத்தப்படும் என்ற எனது வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. ரயில் மற்றும் சாலை பணிகளையும் இன்று தொடங்கி வைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எனது சாதனைகளை வெளியிட விடாமல் தொலைக்காட்சிகளை தமிழக அரசு தடுக்கிறது. எவ்வளவு தடைகள் வந்தாலும் எதிர் கொண்டு தமிழக வளர்ச்சிக்கு பாடுபடுவேன். மத்திய அரசால் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள் கொடுக்கப்படுகின்றன' என்றார்.
அண்மையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ள பேரிடர் காரணமாக மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழக அரசு இதற்கான நிவாரணத்தை அறிவித்திருந்த போதிலும் மத்திய அரசிடமும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து, அதற்கான நிவாரண பணிகளுக்கு நிதி வழங்கிட வேண்டும் என்று பல்வேறு வகைகளில் கோரிக்கை வைத்திருந்தது.
ஒரு கட்டத்தில் கோரிக்கையானது மோதலாக உருவெடுக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே பனிப்போர் வெடித்தது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தேதிக்காக அனைத்து கட்சிகளும் காத்திருக்கும் சூழலில் தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி, தேர்தல் கவனத்திற்காவது மத்திய அரசு சார்பில் வெள்ள நிவாரணம் குறித்து அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து எந்த அறிவிப்பும் பிரதமரின் பேச்சில் இடம் பெறாதது தூத்துக்குடி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு மாவட்டமான நெல்லைக்கு தற்போது சென்றுள்ள மோடி, அங்கு உரையாற்றி வரும் நிலையில் 'அதெல்லாம் சரிதான்.. அங்காவது வெள்ள நிவாரணம் குறித்து வாய் திறப்பாரா?' என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.