மோடியும், எடப்பாடி பழனிசாமியும் குமரி மக்களை சந்திக்க வேண்டும்: தனியரசு, தமிமுன் அன்சாரி பேட்டி
ஓகி புயலால் பாதிகப்பட்ட கன்னியாகுமரி மக்களை மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழக கொங்கு இளைஞர் பேரவைத்தலைவர் தனியரசு ஆகியோர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இரவியன் புத்ததுறை பகுதியில் அங்கு கூடியிருந்த நூற்றுக்கான மீனவ மக்களுக்கு மத்தியில் இருவரும் ஆறுதல் உரையாற்றினர்.
அதன் பிறகு நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில்,
இந்திய பிரதமரும், தமிழக முதல்வரும் இம்மாவட்டதிற்க்கு வருகை தந்து மக்களுக்கு நேரில் ஆறுதல் சொல்ல வேண்டும் என்றும், இதை ஒரு தேசிய பேரிடராக அறிவித்து உதவிகள் செய்ய வேண்டும் என்றும், மீனவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதன் பிறகு மற்றொரு கடலோர கிரமமான வள்ளவிளைக்கு வருகை தந்து அங்கு கதறிய மக்களை பார்த்து ஆறுதல் கூறினர். இந்த கடற்கரையில் இருந்துதான் நாகையை சேர்ந்த 12 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர் என்பது குறிப்பிடதக்கது. அவர்களின் விபரங்களையும் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கேட்டறிந்தார்.
அடுத்து மார்த்தாண்டம் துறை கிராமத்துக்கு இருவரும் வருகை தந்தனர். அங்கு 1000 க்கும் மேற்பட்ட மக்கள் குழுமி இருந்தனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, சின்னதுறை கிராமத்தில் குழுமி இருந்த 500க்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
மத்திய, மாநில உளவுத் துறை கள நிலவரங்கள் குறித்து சரியான தகவல்களை மேலிடத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கூறினர். மேலும், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 7000 ஆயிரம் பேர் மீது வழக்குகள் போடப்பட்டு இருப்பதாக வந்த செய்தி உண்மையானால் அவற்றை உடனடியாக தமிழக அரசு திருப்ப பெற வேண்டும் என்றும், மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது இலாகாப் பூர்வ நடவடிக்கை எடுக்க பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.