காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்ட அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் அமைப்பு சார்பில் இன்று (மே 14, 2018) நடந்தது.
சேலம் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. 30க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர் அவர்களை கலைந்து போகுமாறுதடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் திடீரெனறு ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கர்நாடகா தேர்தலுக்காக தமிழக மக்களுக்கு துரோகம் விளைவித்த மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசுக்கு துணை போகும் அடிமை அரசாக செயல்படும் மாநில அரசைக் கண்டித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதாக அந்த அமைப்பைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 36 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
போராட்டம் கூறித்து அஇஇபெம நிர்வாகிகள் கூறுகையில், ''விவசாயிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசுக்கு அடிமை அராசக எடப்பாடி பழனிசாமி அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் அதிமுக அரசைக் கண்டிக்கிறோம். தமிழக மக்களை பாதிக்கும் எந்த ஒரு செயலையும் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என்றனர்.