Skip to main content

கோகுல்ராஜ் வழக்கு: அரசு சிறப்பு வழக்கறிஞருக்கு கல்தா! பா.மோகன் நியமித்து உத்தரவு!!

Published on 24/02/2019 | Edited on 24/02/2019

 


கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் இதுவரை அரசு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றி வந்த கருணாநிதியை நீக்கிவிட்டு, புதிய சிறப்பு வழக்கறிஞராக பவானி பா.மோகனை நியமித்து தமிழக உள்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

ba


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கொல்லப்பட்டார். அவரை சாதிய ரீதியில் ஆணவக்கொலை செய்ததாக, சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 காவல்துறையினர் கைது செய்தனர்.


இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் கடந்த 30.8.2018ம் தேதி முதல், நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடந்து வருகிறது. முதன்முதலில் இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞராக கோவையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் ஒரு சாட்சியிடம்கூட விசாரணை நடத்தாத நிலையில், திடீரென்று அவராகவே ராஜிநாமா செய்தார். அதன்பிறகு, அரசு சிறப்பு வழக்கறிஞராக சேலத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கருணாநிதி நியமிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து அரசுத்தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையே, கொலையுண்ட கோகுல்ராஜின் தாயார் சித்ரா தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞராக பவானியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பா.மோகனை நியமிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

 

go


மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசுத்தரப்பில் சிறப்பு வழக்கறிஞராக பா.மோகனை நியமிக்கலாம் என்றும், அதற்குரிய உத்தரவை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வழங்குவார் என்றும் கடந்த 12.11.2018ல் உத்தரவிட்டது. அதையடுத்து 10.12.2018ல், நாமக்கல் ஆட்சியர் ஆசியா மரியம், பா.மோகனை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமித்து உத்தரவிட்டார்.


இதைத்தொடர்ந்து கோகுல்ராஜ் தரப்பில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கருணாநிதியுடன், பா.மோகனும் இணைந்து சாட்சிகளிடம் விசாரணை, குறுக்கு விசாரணை நடத்தி வந்தார். அவருடைய வருகை, அரசுத்தரப்புக்கு மேலும் வலு சேர்க்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.


இது ஒருபுறம் இருக்க, உள்துறையிடம் இருந்து முறையான உத்தரவு இல்லாமல் அரசு வழக்கறிஞராக பா.மோகன் ஆஜராகக்கூடாது என்று நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இளவழகன் அதிருப்தி தெரிவித்தார். 


இந்நிலையில், இதுவரை கோகுல்ராஜ் வழக்கில் அரசுத்தரப்புக்காக ஆஜராகி வந்த வழக்கறிஞர் கருணாநிதியை திடீரென்று நீக்கிவிட்டு, இனி இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பா.மோகன் பணியாற்றுவார் என்று உள்துறை முறையான உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 19.2.2019ல் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


இதனால், கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு ஆம்ஸ்ட்ராங் பாராட்டு

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

Armstrong praises senior advocate  mohan

 

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்த தீர்ப்புக்கு உறுதுணையாக இருந்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனை பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் சந்தித்து மரியாதை செலுத்தி நன்றி தெரவித்தார். 

 

“பல்வேறு மிரட்டலும் உயிருக்கு அச்சுறுத்தலும் இருந்தபோதும், தன் உயிர் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட உரிமை இழந்து வாடும் மக்களின் உரிமைக்காக போனால் போகட்டும் என தன்னுயிரை துச்சமாக நினைத்து எட்டு வருடப் போராட்டங்களுக்கு பிறகு ஒரே சாட்சி பிறழ் சாட்சியாக மாறிவிட்ட பிறகும், விடாமுயற்சியால் உண்மை வெல்லும் என அடுத்தடுத்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாதாடி ஆயுள் தண்டனையை பெற்றுத் தந்துள்ள உங்களுக்கு எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்” என்று இந்தச் சந்திப்பின் போது ஆம்ஸ்ராங் தெரிவித்தார்.  

 

 

Next Story

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

 Separate law to prevent caste incident

 

கோகுல்ராஜ் சாதி ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வரவேற்கிறது.

 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் ஓமலூர் பொறியியல் கல்லூரி பட்டியலின மாணவர் கோகுல்ராஜ் இடைநிலை சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக, கொடூரமான முறையில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். கடந்த 2015 ஜூன் 23 ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு  காதலர்கள் சென்ற போது, ஒரு கும்பல் கோகுல்ராஜை கடத்தியது. பிறகு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிபிசிஐடி காவலர்கள் விசாரணை செய்த வழக்கில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியது.

 

அந்த தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பில் கொலைக்கு சாதி தான் முக்கிய காரணம் என்பது நிரூபணம் ஆகி உள்ளது என்றும், சாதி என்ற பேயின் தாக்கத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றம் முன்னிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்.

 

இந்தியா முழுவதும், குறிப்பாகத் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக கடுமையான தண்டனைகளை வழங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக் கொள்கிறது. இந்த வழக்கில் பல்வேறு நிலைகளில் விசாரணை மேற்கொள்ள காரணமாக இருந்த மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.