கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அவர்கள் மருத்துவமனைகள், மார்க்கெட் பகுதிகள் பேருந்து நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனத்தில் உள்ள வான்நோக்கி உயரும் ஏணிகளைப் பயன்படுத்தி பெரிய கட்டிடங்களில் அவர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சென்னை மாநகரில் உள்ள குறுகிய சாலைகளில் பெரிய வாகனங்கள் செல்ல இயலாத நிலை உள்ளதால், அச்சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் வகையில் மாநிலப் பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ஒரு கோடியே 36 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 25 இருசக்கர வாகனங்கள் மற்றும் அந்த வாகனத்தில் பொருத்தப்படும் காற்றழுத்தக் கிருமி நாசினி தெளிப்பான்கள் வாங்கப்பட்டன.
இந்த இருசக்கர வாகனத்தால் ஒரு மணி நேரத்தில் 1,620 லிட்டர் கிருமி நாசினியைத் தெளிக்க இயலும், கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் முடிந்த பிறகு இந்த வாகனங்கள் சென்னையின் குறுகிய சாலைகளில் ஏற்படும் தீயினை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-வே.ராஜவேல்
படங்கள்: ஸ்டாலின், குமரேஷ்