Skip to main content

“எவ்ளோ தைரியம் இருந்தா கோவிலுக்குள்ளே வருவீங்க” - பட்டியலின இளைஞர்களை தாக்கிய கும்பல்

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

  mob attacked youths who had come to worship at the temple

 

மதுரையில் கோவிலுக்குள்ளே சென்ற பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பகுதிக்கு அருகே உள்ளது மையிட்டான்பட்டி கிராமம். இந்த ஊரில் உள்ள முக்கியத் தலங்களில் ஒன்றாக விளங்கக்கூடியது முத்தாலம்மன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த முத்தாலம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் இரண்டு நாட்களுக்கு கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கோஷ்டி மோதல் காரணமாக இந்த கோயிலில் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், அந்த கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையை அடுத்து தமிழக அரசின் அனுமதியுடன் கடந்த 24 ஆம் தேதியன்று கோயில் திருவிழா தொடங்கியுள்ளது. ஊர்மக்களின் ஆரவாரம், நேர்த்திக்கடன்கள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் என விமரிசையாக திருவிழா நடைபெற்று வந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதியன்று மையிட்டான்பட்டி கிராம மக்கள் சார்பில் முளைப்பாரி எடுத்துக்கொண்டு வீதி வீதியாக வந்துள்ளனர். அப்போது மையிட்டான்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் விஜயபாண்டி மற்றும் அவரது நண்பர் மகேஸ்வர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்கள் இருவரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

 

மேலும், அங்கு மாற்று சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்களும் பங்கேற்றிருந்தனர். இத்தகைய சூழலில் இரு பிரிவினர் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மாற்று சமூகத்தினர், "நீங்கலாம் எந்த சாதிக்காரங்கடா.. எவ்ளோ தைரியம் இருந்தா கோயிலுக்குள்ளே வருவீங்க. உங்கள யாருடா உள்ள விட்டது என சாதி பெயரைக் கூறி இழிவாகப் பேசியதுடன் அவர்களை கண்மூடித்தனமாக சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அந்த சமயம் அங்கிருந்த கிராம மக்கள் சிலர் காயமடைந்த இரண்டு இளைஞர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

 

இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதே நேரம், கோயில் திருவிழாவில் கலவரத்தை உண்டாக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வன்முறையில் ஈடுபட்ட பிரவீன், மருதுபாண்டி, ஐயப்பன், வெள்ளைச்சாமி உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கோவில் திருவிழாவில் நடந்த இந்த மோதல் சம்பவம் கள்ளிக்குடி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்