2022-23ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற மானியக்கோரிக்கை விவாதத்தில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில், ''பேரவைத் தலைவர் அவர்களே உள்ளாட்சி அமைப்புகளுக்கு வலுசேர்க்கும் வகையில் முதல்வர் கொடுத்த அறிவிப்பை உண்மையில் மனதார வரவேற்கிறேன். அதேநேரம் முதல்வரின் பார்வை இப்பொழுதுதான் ஊராட்சி உறுப்பினர்கள், பஞ்சாயத்து சேர்மன், ஊராட்சி மன்ற பெருந்தலைவர் வரை வந்திருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் வரை அந்த பார்வை வரவில்லை என்ற ஆதங்கம் எல்லோரிடமும் இருக்கிறது. ஆகவே எனக்குக்கூட வேண்டாம் தேவைப்படுகின்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நீங்கள் ஒரு கார் கொடுத்து உதவினால் அது மிகவும் நன்றாக இருக்கும் சிந்தித்து பார்க்கலாம். எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பிலோ அல்லது முடிந்த அளவு வட்டியில்லாக் கடன் மூலமாவது கார் வழங்க வேண்டும் என்று இந்த அவையில் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
அப்பொழுது பேசிய சபாநாயகர் அப்பாவு, ''மத்திய அரசிடம் நீங்க கொஞ்சம் பரிந்துரை செய்து பணம் வாங்கி கொடுத்துருங்க'' எனக் கூற அவையில் சிரிப்பொலி ஏற்பட்டது.