தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் சென்றுவந்த நிலையில் இன்று மூன்று நாள் பயணமாக டெல்லி செல்லும் முதல்வர் நாளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருக்கிறார்.
இது தொடர்பாக திமுகவினருக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''அமீரகத்தை நோக்கிய பயணம் வெற்றியடைந்த நிலையில் அடுத்த பயணம் இந்திய ஒன்றியத்தை நோக்கி அமைகிறது. டெல்லியில் நாளை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க இருக்கிறேன். அதோடு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி, நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திக்க இருக்கிறேன். தமிழக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, நிவாரணம் உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக இந்த சந்திப்பு நடக்கிறது. தேசிய அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேச இருக்கிறேன். டெல்லியில் திராவிட கோட்டையாக உருவாகியுள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை ஏப்ரல் 2 ஆம் தேதி திறந்து வைக்க இருக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.