கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகேயுள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் - செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி. இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் உள்ள சக்தி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பிலிருந்து படித்து வந்தார். தற்போது 12ஆம் வகுப்பு படித்து வந்த அவர், ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய பெற்றோர் தொடர்ந்து மகளின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 14ஆம் தேதி மாணவி உடல் முதல் முறையாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இது வீடியோ பதிவும் செய்யப்பட்டது. அதன் ஆய்வு அறிக்கையில் மாணவி உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் மற்றும் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை தெரிவித்தது. இதனால் மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உறவினர்கள் பெற்றோர்கள் இடத்தில் எழுந்தது. அதையடுத்து மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு உடற்கூராய்வு மற்றும் வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக் கோரி மனு தொடுத்தனர். இதற்கிடையில் கடந்த மாதம் 17ஆம் தேதி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் மாபெரும் கலவரமாக மாறியது. 50க்கும் மேற்பட்ட பேருந்துகள், வாகனங்கள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டன.
அதேசமயம் பெற்றோர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மறு உடற்கூராய்வுக்கு உத்தரவிடப்பட்டு, மறு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மேலும், சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோரை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் அலைபேசி மூலமாக மாணவியின் தாயார் செல்வியிடம் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். தவறு செய்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். உங்களுக்கு உகந்த நேரத்தில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். தைரியமாக இருங்கள்...” என கூறியுள்ளார்.