Skip to main content

“சீர்திருத்தத் திருமணம் அல்ல; திராவிடத் திருமணம்..” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  

Published on 09/03/2022 | Edited on 09/03/2022

 

 MK Stalin Speech at MP Tamilachi Thangapandiyan

 

திமுகவின் முன்னாள் அமைச்சர் மறைந்த தங்கபாண்டியனின் பேத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் மகளுமான நித்திலா சந்திரசேகர் திருமணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமணத்தில் மணமக்களை வாழ்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், “இன்றைக்கு நடைபெற்றிருக்கும் இந்தச் சீர்திருத்தத் திருமணம்; இதனைச் சீர்திருத்தத் திருமணம் என்று சொல்லக்கூடாது; இப்போது இதைத் திராவிடத் திருமணம் என்றே சொல்லலாம்.

 

ஏனென்றால் திராவிட மாடலில் தான் நம்முடைய ஆட்சி சென்றுகொண்டிருக்கிறது. எனவே இந்தச் சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்று முதன்முதலில் தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா தலைமையில் 1967-இல் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் முதல் தீர்மானமாக இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றித் தந்தார். அந்தத் தீர்மானம் இன்றைக்கு எந்த அளவிற்கு மக்களிடத்தில் பரவலாகி, விரிவாகி, பிரபலமாகி இருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

 

அதைத்தான் தொடர்ந்து தலைவர் கலைஞர் சொன்னார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் இந்தச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். எனவே இங்கிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம், நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, எவ்வாறு தமிழ்நாட்டில் இந்தச் சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுபடியாகும் என்ற நிலை இருக்கிறதோ, அதேபோல இந்தியா முழுமைக்கும் இந்தத் திருத்ததை கொண்டுவர, நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றித் தருவதற்கான சூழலை உருவாக்கித்தர வேண்டும்”  என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்