சேலம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை மாலையில் சேலம் வந்தார். சனிக்கிழமை (ஜூன் 12) காலை அவர் மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.
முன்னதாக சேலம் ஆய்வு மாளிகையில் தங்கியிருந்த அவர், மேட்டூர் அணை திறப்புக்காக கிளம்பினார். அப்போது தங்கும் விடுதியின் வெளியே நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் காத்திருந்தனர். அவர்களைக் கண்ட முதல்வர், உடனடியாக வாகனத்தை விட்டு கீழே இறங்கிச்சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
பின்னர் சிறிது தூரம் காரில் சென்ற முதல்வர், அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை மனுக்களுடன் காத்திருப்பதை அறிந்தார். உடனடியாக காரை நிறுத்தி, அவர்களிடம் நேரில் சென்று மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
அப்போது அவர், கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் கவனமுடன் பணியாற்ற வேண்டும். எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட அவர் சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போதும் மக்களிடம் கோரிக்கை மனுக்கைப் பெற்றார்.
அழகாபுரம் பகுதியில் சாலையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கோரிக்கை மனுவுடன் காத்திருப்பதை கவனித்துவிட்ட மு.க.ஸ்டாலின், வாகனத்தை நிறுத்தி, அவரிடமும் மனுவைப் பெற்றுக்கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் இருந்து இறங்கிச்சென்று மக்களை நெருங்கி நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டதால் பொதுமக்கள் மற்றும் திமுகவினர் உற்சாகம் அடைந்தனர்.