விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்ப்பட்டி பகுதியில் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 20 அறைகள் கொண்ட இந்த ஆலையில், இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று அறைகள் இடிந்து தரைமட்டமான நிலையில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்புப் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த விபத்தில் அச்சங்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(42), சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி(44), சந்திரப்பட்டியைச் சேர்ந்த செல்வக்குமார்(44), மோகன்(50) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பலர் விபத்தில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பட்டாசுக்கு ரசாயன மூலப்பொருள் கலவை கலக்கும் பணி செய்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி முதல்வரின் பொதுநிவாரண நிதியில் இருந்து உயிரிழந்த 4 பேரின் குடும்பம்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.