
கல்வராயன் மலையில் பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையின்போது அங்கு உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதைக் காண்பதற்கும், அருவியில் குளிப்பதற்கும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். அதேபோன்று கடந்த மாதம் ஏழாம் தேதி சென்னை பெத்தேல் நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன். இவரது மகன்கள் 14 வயது புகழ் செல்வம், 12 வயது சுரேஷ். இவர்கள் இருவரும் திருவண்ணாமலை அருகில் உள்ள மடுவம்பட்டு கிராமத்தில் உள்ள அவர்களது அத்தை வீட்டிற்கு விருந்தினராக வந்திருந்தனர்.
அங்கிருந்தபடி கடந்த மாதம் ஏழாம் தேதி சுரேஷ் அவரது உறவினர்களுடன் கல்வராயன் மலையில் உள்ள சிறுகலூர் நீர்வீழ்ச்சிக்குக் குளிப்பதற்கு வந்துள்ளார். அப்போது சிறுவன் சுரேஷ் நீர்வீழ்ச்சியில் குளிக்கும்போது தவறி விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள், அப்பகுதி மீனவர்கள் அனைவரும் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். படகு மூலம் ட்ரோன் கேமரா மூலமும் சிறுவனைத் தேடியும் சிறுவன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக தொடர் மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 10 நாட்கள் தேடியும் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், நேற்று (21.12.2021) மாலை அதே நீர்வீழ்ச்சி பகுதியில் தண்ணீர் குதித்து ஓடும் பாறை இடுக்கு பகுதியில் சிறுவன் எலும்புக்கூடாகக் கிடப்பதை அப்பகுதியில் ஆடு மாடு மேய்க்கச் சென்ற மக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக கரியாலூர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து அந்த எலும்புக்கூட்டைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். கடந்த மாதம் 7ஆம் தேதி அருவியில் குளிக்கும்போது விழுந்த சிறுவன் சுரேஷின் எலும்புக்கூடுதான் இது என தெரியவந்தது. மேலும், அவர் அணிந்திருந்த சட்டை, பேண்ட் துணிகளைக் கொண்டு அது சுரேஷ்தான் என்பதை அவரது தந்தை மணிகண்டன் போலீசார் முன்னிலையில் உறுதி செய்தார். அதனைத் தொடர்ந்து சிறுவன் சுரேஷின் எலும்புக்கூட்டை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கரியாலூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.