அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் மே 3ம் தேதி மூன்று பேர் கொண்ட குழு விசாரணை நடத்துகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லியகரையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஜயபாஸ்கர் என்பவர் வட்டார மருத்துவ அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள கனிம வளங்களை தனியாருக்கு விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அரசு ஒதுக்கிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் தங்கவளவன் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். அதன்பேரில் மருத்துவர் விஜயபாஸ்கர் மீதான புகார் குறித்து விசாரிக்க ஆத்தூர் மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மாவட்ட சுகாதார அலுவலகத்தில் பணியாற்றி வரும் மருத்துவர் லத்தீஷ்குமார், நிர்வாக அலுவலர் செல்வம், மருத்துவர் திருமலை வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. மூவர் குழுவின் முன்பு மே 3ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி மருத்துவர் விஜயபாஸ்கருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.